Sunday, March 3, 2013

பெண்களை தாக்கும் குடலிறக்கம் நோய் பற்றய தகவல்கள்


ஹெர்னியா’ எனப்படும் குடலிறக்கத்தால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும்.

அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக, ‘சிசேரியன்’ எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அடுத்ததாக, பெண்களுக்கு வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது.

ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆகஆக அவரது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது. இப்படித்தான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது. இதேபோல், ஆண்களுக்கும் சில காரணங்களால் குடலிறக்கம் ஏற்படலாம்.

அவர்களது இடுப்புக்கு கீழ், சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைகள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன. அந்த பகுதி வலுவிழக்க நேரிடும்போது அவர்களுக்கு அந்த பாதையில் குடல் இறங்கலாம். இதுதவிர, தொப்புள் பகுதியும் வலுவிழக்கும் வாய்ப்புகள் இருப்பதால் அவற்றின் வழியாகவும் குடலிறக்கம் ஏற்படலாம்.

மேலும், ஆண்கள் முதுமையடையும் காலத்தில், ‘புரோஸ்டேட்’ சுரப்பிகள் வீங்கிப் பெரிதாகும். சிறுநீர் கழிப்பதில் அது சிரமத்தை ஏற்படுத்த, நாளடைவில் அந்த சிரமமே அவருக்கு குடலிறக்கம் ஏற்பட வழிவகுத்து விடுகிறது. இந்த காரணங்கள் தவிர, ஆண், பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட சில பொதுவான காரணங்களும் உள்ளன.

இயற்கை கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டா லும் அதன் காரணமாகவும் ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்படும். ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இருமினாலும் கூட குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருமல் ஏற்படும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதுதான் அதற்கு காரணம்.

தடுப்பு முறைகள்……..

பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும்போது இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்காக சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த வலை திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்த பகுதிக்கு வலுவூட்டுகிறது. இயற்கைக் கடன்களை கழிக்கும்போது தேவையில்லாமல் சிரமப்படுவதை (முக்குவது) தவிர்த்தாலும் குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment