ருசியான சமையலுக்கு உப்பு அவசியம். உயிர்கள் முதலில் தோன்றியது உப்பு நீரில் இருந்து தான். உயிர்கள் கடலைவிட்டு, நிலத்துக்கு வந்த பின்னும் அவற்றின் வளர்ச்சிக்கு உப்பு முக்கியமாகிவிட்டது. உண்மையில், உப்பு இல்லாவிட்டால் உயிர் வாழ்க்கையே இல்லை. 40% சோடியமும், 60% குகோரினும் அடங்கிய கலவைதான் 'உப்பு'.
உணவு செரிக்கவும், நரம்புகளின் செயல்திறனை அதிகரித்து உமிழ்நீர் சுரக்க உப்பு உதவுகிறது. உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இது தேவைப்படுகிறது. நமது உடல் சுரக்கும் சில நீர்களிலும் ரத்தத்திலும் உப்பு கலந்திருக்கிறது. கண்ணீர், வியர்வை, சிறுநீர், மலம் ஆகியவற்றிலும் உடலுக்குப் போக மீதியாகும் உப்பு கலந்து வெளியேறுகிறது. உப்புதான் உடலிலுள்ள நீரோட்டத்தையும் ரத்த ஓட்டத்தையும் ஒழுங்குபடுத்துகிறது.
பல மங்கல நிகழ்வுகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது இந்த உப்பு ஆகும். குறிப்பாக புதுமனைப் புகும் பொழுது முதலில் வீட்டுக்குள் கொண்டு செல்லப்படுபவை உப்பும் மஞ்சளும் ஆகும். திருமணச் சடங்கு முதற்கொண்டு இறுதிச் சடங்கு வரையில் உப்புதான் இன்றியமையாத பொருளாகத் திகழ்கின்றது. உண்ணும் உணவிலிருந்து இன்னும் பிற உணவுப் பண்டங்கள் வரையில் சுவை கொடுப்பது உப்புதான்.
உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்து உண்டால் அது உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றிற்கு எளிதாக வழிவகுக்கும். உணவில் உப்பு குறைவாக இருந்தாலும் குறைந்த ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றிற்கு அடிகோலும். இதைத்தான் 'மிகினும் குறையினும் நோயே' என்றனர் பெரியோர்.
'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' , ' உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என உப்பின் சிறப்பினை தமிழர்கள் உணர்ந்ததால் தான் பழமொழிகளை அடுக்கியுள்ளார்கள்.
No comments:
Post a Comment