ஏராளமான பேர்களுக்கு வரும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று முடி கொட்டும் பிரச்னை. இதைப்பற்றி முன்பே பார்த்தோம். இப்போது முடி கொட்டாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கையாக ஒரு ஆயில் தயாரித்தால் நன்றாக இருக்கும் என நிறைய பேர் கேட்டு இருந்தார்கள். அதன் அடிப்படையில்தான், ஆயில் தயாரிப்பு பற்றி ஹேர் ஆயில் தயாரிக்கும் பிரபலமான நிறுவனம் ஒன்றிடம் போய் அவர்கள் எப்படி தயாரிக்கிறார்கள் என அறிந்துகொண்டு அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நிறுவனங்கள் என்னதான் சுத்தமாக தயாரித்துக் கொடுத்தாலும்,அதில் நமக்கு திருப்தி ஏற்படுவது இல்லை. எனவே நாமே தயாரித்து வைத்துக் கொண்டால் நம்பிக்கையும் தரமும் நிறைந்ததாக இருக்கும். ஒரு வருடத்திற்குக்கூட ஹேர் ஆயிலை தயார் பண்ணி வைத்துக் கொள்ளலாம்.கெட்டுப்போகாது. இதில் இருக்கும் ஒவ்வொரு கீரையும், கீரை விற்பவர்களிடம் முதல் நாள் சொல்லி வைத்தால் மறுநாள் கொண்டு வருவார்கள்.அதனால் வாங்குவதும் எளிது வெளியில் சென்று அலையத் தேவை இல்லை.இனி முடி கொட்டாமல் இருக்கவும் முடி கருமையாக வளரவும் ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கரிசலாங்கண்ணிக் கீரை -1 கட்டு
பொன்னாங்கண்ணிக் கீரை -1 கட்டு
அரைக் கீரை -1கட்டு
முளைக்கீரை -1 கட்டு
வல்லாரை -1 கட்டு
குப்பைமேனி -1 கட்டு
கீழாநெல்லி -1 கட்டு
கறிவேப்பிலை - 1 கட்டு
மருதாணி - 1 கட்டு
செம்பருத்தி இலை -1 கட்டு
நெல்லிக்காய் - பெரியது 5
பொடுதலை இலை -1 கட்டு
வெட்டி வேர்(நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும்)-5 ரூபாய்க்கு
நல்லெண்ணெய் - 2 லிட்டர்
தேங்காய் எண்ணெய் -2 லிட்டர்
விளக்கெண்ணெய் -1/2லிட்டர்
செய்முறை :
இவை அனைத்தையும் வாங்கி வெயிலில் 3 நாட்கள் காய வைத்து, மிக்ஸியில் போட்டு பவுடர் பண்ணிக்கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் அரைத்து வைத்துள்ள கீரை பவுடரை எண்ணெயில் போட்டு அடுப்பை சிறிதாக எரியும்படி வைத்துவிட வேண்டும். அரைமணி நேரம் கழித்து இறக்கிவிடவும். இரண்டு நாட்கள் வாணலியிலேயே வைத்து பிறகு வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டால் கெட்டுப்போகாது. வாசனையும் கமகம என வரும். முடியும் கருமையாகவும் கொட்டாமலும் வளரும். செய்து யூஸ் பண்ணிப் பாருங்க, அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீங்க
No comments:
Post a Comment