Tuesday, October 2, 2012

கேள்வி: `எது நல்லது? காபியா? டீயா?’


காலையில் சிலர் காபி முகத்தில் தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை முக்கைத் துளைக்கும் போதுதான் படுக்கையில் இருந்தே எழுவார்கள். இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப்பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி: `எது நல்லது? காபியா? டீயா?’

முதலில் `டீ’க்கு வருவோமா? டீ குடித்தால் சில புற்று நோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது.

ஒரு கப் டீயில் காபியை விட குறைவான `காபினே’ இருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட அவசியமில்லை. உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒருநாளைக்கு ஒரு கப் டீயுடன்நிறுத்திக் கொள்வது நல்லது. இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து விடக்கூடும்.


சிலர் டீ கொதிக்க கொதிக்க இருக்கும்போதே அதே சூட்டில் தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

காபி கதைக்கு வருவோம். `டீ’யை விடவும் காபியில் `காபின்’ அதிகம் இருப்பதால் டீயை விட சிறப்பாகவும், வேகமாகவும், அதிக செயல்திறனை உணரமுடிகிறது. டீ குடிப்பவர் களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட இது அதிகம். குறிப்பாக டிகாக்ஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம்.

வடி கட்டப்பட்ட `பிளாக் காபி’க்கு அல்சைமர்ஸ், பெருங்குடல் புற்றுநோய், டைப்-2 நீரிழிவு நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம்.

சிலர் கையில் எப்போதும் காபிக்கோப்பை புகைந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் பின்னாளில் மனக்கவலை சார்ந்த நோய்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே காபியானாலும் அளவோடு குடித்து ஆரோக்கியம் காக்கலாம். காபிக்கு அடிமையாகி விட்டதை உணர்ந்து திடுமென அதை நிறுத்த முயல்பவர்கள் ஒரேயடியாக சோர்ந்து போவார்கள். கவனம் செலுத்துதலில் குறைபாடு ஏற்படக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.

1 comment:

  1. எனக்கு காபியின் மருத்துவ குணங்கள் எதுவும் தெரியாது. ஆனால் அதிகாலை வீட்டிலிருந்து பால் கறந்து சுடவைத்து , அப்பொழுது அரைத்த காபி பொடியில் டிகாக்ஷன் போட்டு கலந்த காப்பிக்கு எங்கள் கடையில் ஒரு ரசிகர் மன்றமே உண்டு. வீட்டிற்கு பால் பாக்கட் வாங்கிக்கொண்டு ஒரு காப்பி குடித்துவிட்டு நாளிதழ்களின் தலைப்பு செய்திகளை மேய்ந்துவிட்டு செல்வோர் அதிகம். காப்பியை வெறுமனே குடிப்போரும் , டிபனுடன் சேர்த்து அந்த மிளகாய் பொடியின் ருசியுடன் காப்பியின் ருசியும் சேர அனுபவிப்பவரும் , உலகத்தையே புரட்டிப்போடும் சிந்தனையுடன் ஒரு கையில் தம் மறு கையில் காப்பி என்று ரசிப்பவரும் இப்படி பலர் பல விதமாக காப்பி பக்தர்கள். எங்கள் வீட்டில் காப்பி போடும் விதமே தனி. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, கொதித்த நீரில் காப்பிப் பொடியை போட்டு ஸ்பூனால் ஒரு கலக்கு கலக்கி , அதன் தலையில் ஒரு கை பச்சை தண்ணீரை தெளித்து மூடி வைத்து, பிறகு அதனை இறுத்து எடுத்த டிகாக்ஷனில் கொஞ்சம் பால் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் ........ஐயோ .....அத அனுபவத்தை வருணிக்க வார்த்தைகள் போதாது ..... இந்த டீ சமாச்சாரத்தில் நான் கொஞ்சம் வீக். கிரீன் டீ, லெமன் டீ பிடிக்கும் அவ்வளவுதான்....

    ReplyDelete