Tuesday, February 26, 2013

தூக்கம் வரலையா? செர்ரி ஜூஸ் குடிங்களேன்!


இன்சோம்னியா எனப்படும் தூக்கக்குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் செர்ரி பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் அந்த நோயினை குணப்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கிலுள்ள ரோசஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோய் ஏராளமானோருக்கு உண்டு. வயதானவர்களில் 4-ல் ஒருவருக்கு இந்த நோய் உண்டு. இந்த நோய் இன்சோம்னியா என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயை விரட்டுவதற்கு செர்ரி பழ ஜூஸ் போதும் என்கிறார் ரோசஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியரும், உளவியல் நிபுணருமான டாக்டர் வில்பிரட் பிஜியான்.

1.மன உளைச்சல் ஏற்படும்

தூக்கமின்மை என்பது சாதாரணமாக விடக்கூடியது அல்ல. அதை உடனே சரிசெய்ய வேண்டும். கடின உழைப்புக்கு பின்பு இரவில் உறக்கம் இன்றி அவதிப்படுவது அடுத்த நாளின் இயல்பு வேலைகளை பாதிக்கும்.இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது மன உளைச்சல் ஏற்பட்டு நோயாளியாக மாறும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் அதிகம். இன்சோம்னியா நோயால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார். அப்படியே தூக்கம் வந்தாலும் விரைவில் எழுந்துவிடுவார்கள். நவீன காலத்தில் இன்சோம்னியா நோயை குணப்படுத்துவது என்பது மிகப் பெரிய சவாலாகும். அந்த சவாலை நிறைவேற்ற செர்ரி பழ ஜூஸ் உதவுகிறது. இது குறித்து 2 கட்டமாக நடைபெற்ற ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு காலை, மாலை இரு வேளையிலும் செர்ரி பழ ஜூஸ் கொடுக்கப்பட்டது. 2-வது கட்டத்தில் அதே நபர்களுக்கு வேறு பழ ஜூஸை கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இதைச் செய்யும்போது அவர்களுக்கு நல்ல தூக்கம் வருவது ஆய்வில் நிரூபணமானது.

2.வைட்டமின் சி அதிகம்

செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. செர்ரிப் பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு 20 ஆக இருப்பதால், இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸ். தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும் உடம்புக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும்.

எப்படி ஜூஸ் தயாரிக்கலாம். தண்ணீருடன் தேவையான அளவு பழங்களைப் போட்டுப் பிழிய வேண்டும். மெல்லிய துணிப்பையினால் அதை வடிகட்டி அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவேண்டும். இதுதான் செர்ரிப் பழ ஜூஸ். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காலையிலும், மாலையிலும் இந்த ஜூஸை அவர்கள் குடிக்கவேண்டும்.

செர்ரி பழ ஜூஸ் குடிப்பவர்கள் சராசரியாக 17 நிமிடங்கள் அதிகம் தூங்குவது தெரியவந்தது. இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட வில்பிரட், செர்ரி பழத்தில் உள்ள மெலடோனின் சத்து, உடலிலுள்ள ஹார்மோனை முறைப்படுத்தி தூக்கத்தை முறையாக உடலுக்கு வழங்குகிறது. பகலில் உழைப்பு, இரவில் தூக்கம் என்ற சுழற்சியை அந்த ஹார்மோன் ஏற்படுத்த ஜூஸ் உதவுகிறது என்று கூறியுள்ளார். இந்த ஆய்வு குறித்து மெடிசனல் ஃபுட் என்கிற பத்திரிகையில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஆய்வு

‘இன்சோம்னியா’ நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவது குறித்து உலகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் நார்த்அம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. நமது உணவு, பழக்க வழக்கங்கள் காரணமாக தூக்கம் பாதிக்கப்படலாம். இதற்கு மருந்து, மாத்திரைதான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. படுக்கைக்கு செல்லும் முன்பு தினமும் ஒரு கிளாஸ் செர்ரி பழச்சாறு குடித்தால் நன்கு தூக்கம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. செர்ரி ஜூஸ் குடித்தவர்கள் கூடுதலாக 25 நிமிடம் தூங்கினார்களாம்.

No comments:

Post a Comment